வர்த்தக நகரமான தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு மத்திய அரசு உரிய தீர்வு வழங்கியுள்ளது. பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் அமைந்துள்ள மேலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் வகையில் மத்திய ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.


மேலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் சார்பில், மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


இந்த கோரிக்கையை ஏற்று, டாக்டர் எல்.முருகன், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில், மேலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


இந்த முக்கிய முடிவின் மூலம் பொதுமக்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பெரிதும் பயனடைவார்கள். மேலும், தூத்துக்குடி நகரின் போக்குவரத்து வசதி குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த மக்கள்நல முடிவை எடுத்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும், பரிந்துரை செய்த மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகனுக்கும், தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.