தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைப்படி, மாவட்டம் முழுவதும் பள்ளி வளாகங்கள், சாலையோரங்கள், கடற்கரை பகுதிகள், ஓடைகள், ஆற்றங்கரைகள் மற்றும் பொது இடங்களில் 50,000 பனை விதைகள் நடும் பசுமை முயற்சியின் தொடக்க விழா 31.10.2025 (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இந்த விழா தூத்துக்குடி முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், இ.ஆ.ப. தலைமையேற்று தொடக்கநடவு பணியை தொடங்கி வைத்தார்.

ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் க. முனுசாமி மாவட்ட வன அலுவலர் மு. இளையராஜா அவர்கள் முன்னிலையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மேலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் து. சிதம்பரநாதன், மாவட்டக் கல்வி அலுவலர் இரவீந்தரன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சிவபிரசாத், மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஹசீனா பானு, முதல்வரின் பசுமைத்தூதர் சங்கீதா, ஒருங்கிணைப்பாளர் சுடலைமணி, தூத்துக்குடி வட்டாட்சியர் உட்பட பல அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

நிகழ்வில் முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 145-க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டன. இந்த விழாவை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து ஒருங்கிணைத்தன.

இந்நிகழ்வில் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் இராமசாமி மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மாலதி ஆகியோரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமையாசிரியர் ஜோ. எலியாஸ் மற்றும் பள்ளி பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முனைவர் கா. சரவணகுமார் ஆகியோர் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.

பசுமையான எதிர்காலத்திற்கான முக்கியமான முயற்சியாக இந்த பனை விதை நடும் திட்டம் மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.