ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டப்பிடாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று காலை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


ஆய்வின் போது கல்லூரி அலுவலகத்தில் பேராசிரியர்களின் வருகை பதிவேடு, கல்லூரியில் செயல்பட்டு வரும் பாடப்பிரிவுகள், கல்வி தரம் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து பேராசிரியர்களிடம் நேரடியாக கேட்டறிந்தார்.


இதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பயிலும் மாணவ, மாணவிகளை சந்தித்து கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், திராவிட மாடல் அரசின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.


இந்த ஆய்வின் போது ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத், கல்லூரி முதல்வர் கிரேசா ஜேக்கப், அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.