தூத்துக்குடி மாவட்ட புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தருவைக்குளம் கிளை, தாளமுத்துநகர் கிளை ஆகியவற்றின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.


இதன் ஒரு பகுதியாக தாளமுத்துநகர் ஆர்.சி. நடுநிலைப் பள்ளி மாணவ–மாணவிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டைகளில் தங்களது வாழ்த்துகளை எழுதி அனுப்பினர். இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் வின்சென்ட் அவர்கள் உடனிருந்தார்.


நிகழ்வுக்கான ஏற்பாடுகளை புத்தகம் வாசிப்பு நற்பணி மன்ற அமைப்பாளரும், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தாளமுத்துநகர் கிளை தலைவருமான அ. ரவி சிறப்பாக செய்திருந்தார்.


அதேபோல் தருவைக்குளம் கத்தரினாள் மகளிர் பள்ளி மற்றும் தூய மிக்கேல் தொடக்க பள்ளி மாணவ–மாணவிகளும் மாவட்ட ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்துகளை அஞ்சல் அட்டையில் எழுதி, நேரடியாக தபால் அலுவலகத்திற்குச் சென்று தபால் பெட்டியில் செலுத்தினர்.


இந்நிகழ்வின்போது பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற கிளைகள் சார்பில் லாரன்ஸ் மற்றும் அ. ரவி ஆகியோர் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.


மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தையும், சமூக விழிப்புணர்வையும் ஊக்குவிக்கும் இந்த முயற்சி அனைவரிடமும் பாராட்டை பெற்றது.