தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலை, மருத்துவம், உணவு, நாட்டுப்புற விளையாட்டுகள் மற்றும் நாட்டு நாய்களின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் 3வது ‘தமிழன்டா சங்கமம் 2026’ விழா தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.


தமிழன்டா இயக்கம் மற்றும் கலைக்குழு சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழரின் கலைகள், தமிழரின் மருத்துவ முறைகள், தமிழரின் உணவுப் பாரம்பரியம், நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்டவை மையமாக்கப்பட்டன. இந்த விழாவை முன்னிட்டு தமிழன்டா இயக்கம், கே.சின்னத்துரை அண்ட் கோ, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சத்தியா குழுமம், சைன் யோகா பவர், பெருந்தலைவர் மக்கள் நல சங்கம், காமராஜ் கல்லூரி, காமராஜ் மகளிர் கல்லூரி, உடற்கல்வித்துறை, பல்வேறு விளையாட்டு அகாடமிகள், மருத்துவ நிறுவனங்கள் மற்றும் அனைத்து கிராமிய கலைச் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.


முதல் நாள் நிகழ்வுகள்


ஜனவரி 9ம் தேதி காலை 6 மணிக்கு 5 கி.மீ. மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். காமராஜ் கல்லூரி உடற்கல்வித்துறை தலைவர் மற்றும் இயக்குநர் பேராசிரியர் முனைவர் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தார். போட்டிகள் பள்ளி மாணவர்கள், மாணவியர், கல்லூரி மாணவர்கள், மாணவியர் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டோர் என ஐந்து பிரிவுகளாக நடைபெற்றன. பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என பரிசுத்தொகை வழங்கப்பட்டது. பிற பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழன்டா விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
காலை 9 மணிக்கு பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இலவட்டக்கல் தூக்குதல், அம்மியில் தேங்காய் உடைத்தல், ஆட்டு உரலில் மாவு அரைத்தல், பம்பரம், கோலிக்காய், கிட்டி கம்பு, நொண்டி ஓட்டம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வில் 523 பேர் வெற்றிலை–பாக்கு போடும் நிகழ்வில் பங்கேற்று உலக சாதனை படைத்தனர். மேலும் 1000 பனை விதைகள் நடும் நிகழ்வும் நடைபெற்றது.


இரண்டாம் நாள்


இரண்டாம் நாளில் பனை சார்ந்த கண்காட்சி, நாட்டு நாய்கள் கண்காட்சி, மாநில அளவிலான சிலம்பம், யோகா போட்டிகள், கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்தனர்.


மூன்றாம் நாள் மூன்றாம் நாள்


காலை நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. 500 பேர் பழைய கஞ்சி குடிக்கும் நிகழ்வு, 523 பேர் பங்கேற்ற கோலமிடும் உலக சாதனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை முகாம் தொடங்கி வைக்கப்பட்டு, மூன்று நாட்களும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்றனர்.


அமைச்சர் கீதா ஜீவன் உரை


மாலையில் நடைபெற்ற தமிழன்டா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், “தமிழர் பண்பாடு, கலை, மருத்துவம் ஆகியவை சிறப்பிடம் பெற வேண்டும் என்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வின்றி உழைத்து வருகிறார். தமிழர் கலைகளை மேம்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு விழாக்களில் அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தூத்துக்குடியில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழன்டா சங்கமம் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.


நிறைவு


மூன்று நாட்களும் இயற்கை மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், வர்மம், ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன. பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், உலக சாதனை முயற்சிகள் என தமிழர் பண்பாட்டை மீண்டும் உயிர்ப்பிக்கும் விழாவாக 3வது தமிழன்டா சங்கமம் அமைந்தது.