தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பில் அமைந்துள்ள பிரத்தியங்கிராதேவி பீடத்தில், சித்திரை மாதம் 23ஆம் தேதி (06-05-2026) புதன்கிழமை மதியம் 1.30 மணிக்கு ஶ்ரீ வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை, அபிஷேகம், மஹாயாகம் மற்றும் அன்னதான நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.


பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆன்மிக நிகழ்வில், உலகில் அன்பும் அமைதியும் நிலவவும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் செழிக்கவும், பக்தர்கள் வாழ்க்கையில் செல்வ வளம் பெருகவும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.


காலை முதல் மாலை வரை நடைபெற்ற மஹாயாக பூஜைகளில், ஶ்ரீ வாராஹி அம்மனுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.


தொடர்ந்து, மதிய வேளையில் பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டுக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.