தூத்துக்குடி, அக்.29 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இன்று (29.10.2025) வார்டு வாரியாக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெற்றன. மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு, சாலை, மழைநீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை போன்ற அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு தீர்வு காணும் நோக்கத்துடன் இக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அதில், தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம் 45வது வார்டில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், கவுன்சிலரும் பிரையன்ட் நகர் திமுக செயலாளரும் மாநகராட்சி நகரமைப்பு குழுத் தலைவருமான ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகர நல அலுவலர் டாக்டர். சரோஜா மற்றும் சுகாதார ஆய்வாளர் சிவப்ரிதா கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். மக்களின் குறைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என டாக்டர். சரோஜா உறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.எஸ். ரமேஷ் மற்றும் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா. ரமேஷ் ஆகியோரின் ஆலோசனையின் பேரில், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணப் பெருமாள் தலைமையில் மாநகராட்சிக்கு மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டதாவது:
கட்டபொம்மன் நகர் 12வது தெரு மேற்கு பகுதியில் மழைக்காலத்தில் ஒருசில வீடுகளில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. ஆகவே, புதிய கேஸ் பிட் (catch pit) அமைத்து மழைநீர் தேங்காமல் சீரான வடிகால் அமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அதே பகுதியில் உள்ளே செல்லும் முதல் தெருவில் புதிய மின்கம்பம் மற்றும் தெருவிளக்கு அமைக்கவும், மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்க கொசு மருந்து தெளிக்கும் பணிகளை மேற்கொள்ளவும் கோரப்பட்டுள்ளது.

மதிமுக சார்பில் அளிக்கப்பட்ட இம்மனு மாநகராட்சி அலுவலர்களிடம் பதிவு செய்யப்பட்டு, அதில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.