இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்கள், சார் தாம், அகில இந்திய ஸ்கேட்டிங் சுற்றுலா மற்றும் கலாச்சார ஸ்லோகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் அஜய் குமார் விஸ்வகர்மா, தேசியக் கொடியுடன் நீண்ட தூர ஸ்கேட்டிங் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அவரது பயணம் ஜார்கண்ட் முதல் கன்னியாகுமரி, பின்னர் கன்னியாகுமரி முதல் காசி வரை நடைபெறுகிறது. மதமும், கலாசாரமும், தேசப் பற்றும் ஒன்றிணையும் இந்த தனித்துவமான ஸ்கேட்டிங் சுற்றுலா வழியாக, இளைஞர் தலைமுறைக்கு ஊக்கம் அளிக்கும் நோக்கத்துடன் அஜய் குமார் தனது முயற்சியைத் தொடங்கியுள்ளார்.

அவரது இந்த அரிய முயற்சிக்கு தூத்துக்குடியில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட காமராஜர் நற்பணி மன்றத் தலைவர் லாரன்ஸ் அவர்கள், அஜய் குமாரை வாழ்த்தி வரவேற்றார். அவருடன் நவமணி உட்பட பலரும் கலந்து கொண்டு, தேசிய உணர்வை வெளிப்படுத்தும் விதமாக ஸ்கேட்டருடன் செல்பி எடுத்து உற்சாகம் பகிர்ந்தனர்.

தேச ஒருமைப்பாடு, ஆன்மீக ஒற்றுமை மற்றும் இளைஞர் விழிப்புணர்வை இணைக்கும் அஜய் குமாரின் இந்த ஸ்கேட்டிங் யாத்திரை, மக்கள் மத்தியில் பாராட்டையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.