தூத்துக்குடி–திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை பகுதியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 60 கிராம மக்கள் கடும் போக்குவரத்து சிக்கலில் சிக்கியுள்ளனர். இதனைத் தீர்க்க, மேம்பாலத்தை நீட்டிப்பு செய்து புதிய இணைப்பு வழித்தடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட புதுக்கோட்டை, கூட்டாம்புளி, மேலகூட்டுடன்காடு, நடுக்கூட்டுடன்காடு, கீழகூட்டுடன்காடு, சிறுப்பாடு, திருமலையாபுரம், சூசைபாண்டியாபுரம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கல்வி, வேலை, சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காக தினசரி தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி நோக்கி பயணம் செய்கிறார்கள்.

முன்னதாக, அனைத்து பேருந்துகளும் புதுக்கோட்டை ஊருக்குள் வந்தே சென்றதால், பொதுமக்களுக்கு எந்த சிரமமும் இல்லை. ஆனால், புதிய தேசிய நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டதுடன், அதில் மேம்பாலம் கட்டப்பட்டதும், தற்போது எந்தப் பேருந்தும் புதுக்கோட்டை ஊருக்குள் வருவதில்லை. திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் செல்லும் பேருந்துகள், புதுக்கோட்டை வெளியே பயணிகளை இறக்கிவிட்டு புறப்படுகின்றன. இதனால், பெண்கள், மாணவர்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் பெரும் சிரமத்தையும், விபத்து அபாயத்தையும் எதிர்கொள்கின்றனர்.

இதுகுறித்து, புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில்,

“புதுக்கோட்டை பழைய பாலத்தை புதுப்பிக்கவும் அல்லது அதனருகே புதிய பாலம் ஒன்றை கட்டவும் வேண்டும். மேலும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதிய மேம்பாலத்தை நீட்டித்து, கீழகூட்டுடன்காடு பேருந்து நிறுத்தம் மற்றும் அஞ்சல் அலுவலக சாலை வழியாக இணைக்கும் வகையில் புதிய வழித்தடம் அமைக்க வேண்டும். இதன்மூலம் போக்குவரத்து சீராகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சமூக செயற்பாட்டாளர் ஏ.ஆர்.எஸ். சரவணபெருமாள் கூறியதாவது:

“மேம்பாலம் கட்டியதிலிருந்து புதுக்கோட்டை ஊருக்குள் பேருந்துகள் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் துயரத்தைச் சந்திக்கிறார்கள். எனவே, புதுக்கோட்டை பழைய பாலத்தை அகற்றி அதே இடத்தில் புதிய பாலம் கட்ட வேண்டும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதற்கான 9.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட அறிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை,” என்றார்.

அவரும் மேலும் கூறியதாவது:

“புதிய பாலம் கட்டும் வரை, தற்போதைய பேருந்துகளை தற்காலிகமாக முருகன் கோயில் வழியாக புதுக்கோட்டை ஊருக்குள் வரும்வகையில் இயக்க வேண்டும். அதேபோல், திருநெல்வேலியிலிருந்து வரும் பேருந்துகள் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி வழியாக புதுக்கோட்டை ஊருக்குள் வந்து, அங்கிருந்து மீண்டும் தேசிய நெடுஞ்சாலையை அடையும் வகையில் ஏற்பாடு செய்யலாம். தற்போது பல ஆம்னி பேருந்துகளும் இதே வழியாக வருகின்றன.”

மக்களின் நலனை கருதி, தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை இணைந்து துரிதமாக ஆய்வு செய்து, புதுக்கோட்டை பகுதியில் புதிய பாலம் மற்றும் மேம்பால நீட்டிப்பு பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரிடமிருந்து வலுத்து வருகிறது.