தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ சண்முகையாவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாதது, கட்சி தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக ஆட்சிக்காலத்திலேயே திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நீண்டகால அதிமுக ஆதிக்கத்தை முறியடித்து ஓட்டப்பிடாரம் தொகுதியின் அரசியல் வரலாற்றையே மாற்றியவர் சண்முகையா. தொடர்ந்து 2021 பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று தனது செல்வாக்கை நிலைநிறுத்தினார்.
தொகுதியில் வளர்ச்சி திட்டங்கள், அடிப்படை வசதிகள், அரசு நலத்திட்டங்களை பாரபட்சமின்றி செயல்படுத்தியவர் என்ற பெயரை பெற்றிருந்த நிலையில், “மூன்றாவது முறையும் சண்முகையாவே போட்டியிடுவார்” என்ற எதிர்பார்ப்பு திமுகவினரிடம் அதிகமாக இருந்தது. ஆனால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில், சண்முகையாவிற்கு வாய்ப்பு வழங்கப்படாமல் ராமஜெயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது எதிர்பாராத மாற்றமாக அமைந்துள்ளது.
இதனால், “தொகுதியின் நிலைமைகளை நன்கு அறிந்த மற்றும் வெற்றியை உறுதி செய்த சண்முகையாவை புறக்கணித்தது ஏமாற்றமளிக்கிறது” என அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், இந்த முடிவை திமுக தலைமை மறுபரிசீலனை செய்து, மீண்டும் சண்முகையாவிற்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஓட்டப்பிடாரம் முழுவதும் வலுத்து வருகிறது. இந்த விவகாரம் தேர்தலை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.