தமிழக அரசியல் களத்தில் புதிய மாற்றத்தை நோக்கி “நம் நாடு, நம் மக்கள், நம் எதிர்காலம்” கட்சி தனது முதல் சட்டமன்ற தேர்தல் பயணத்தை தொடங்கியுள்ளது. கட்சியின் நிறுவனத் தலைவர் டி.பி.எஸ். பொன்குமரன் மற்றும் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 7 தொகுதிகளில் போட்டியிடும் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, முதல் முறையாகவே தமிழக சட்டசபை தேர்தலில் களம் காணத் தயாராகியுள்ளது. இதன் முதல் கட்டமாக வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில்:
டி.பி.எஸ். பொன்குமரன் – தூத்துக்குடி
அருணாதேவி ரமேஷ் பாண்டியன் – ஓட்டப்பிடாரம் (தனி)
சுடலைமணி – ஸ்ரீவைகுண்டம்
முத்துசெல்வி – திருச்செந்தூர்
ஜெயசீலன் – கோவில்பட்டி
ரத்தினராஜ் – விருதுநகர்
ஜெய்கணேஷ் – விளாத்திகுளம்
என 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை (திங்கட்கிழமை) தங்களது தொகுதிகளின் தலைமை அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இதுகுறித்து பொதுச்செயலாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கூறியதாவது: “தேர்தல் என்பது திருவிழா அல்ல, கேளிக்கை அல்ல, பொழுதுபோக்கும் அல்ல. அது மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான பொறுப்பு. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் இந்த வாய்ப்பை வாக்காளர்கள் சிந்தித்து பயன்படுத்த வேண்டும். கட்சி சின்னம், சாதி, மதம் பார்க்காமல், வேட்பாளர்களின் நற்பண்புகள் மற்றும் திறமைகளை மதித்து வாக்களிக்க வேண்டும்” என்றார்.
மேலும், “நாட்டின் எதிர்காலம் மக்களின் விரல் நகங்களில் உள்ளது. லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்போம். டாஸ்மாக் கடைகளை மூடுவோம். அனைவருக்கும் இலவச கல்வி வழங்குவோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். அரசு அலுவலகங்களில் மக்களின் மனுக்களுக்கு விரைவான தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்போம் – இதுவே எங்கள் கட்சியின் முக்கிய இலக்குகள்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
புதிய அரசியல் மாற்றத்துக்கான சின்னமாக களம் காணும் இந்தக் கட்சியின் முதல் முயற்சி, தேர்தல் அரங்கில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.