தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 28.03.2026 அன்று 45வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் ஏ.டி. ஜகதீஸ் சந்திரா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 695 மாணவியருக்கு பட்டங்கள் வழங்கினார்.
பின்னர் அவர் ஆற்றிய சிறப்புரையில், பெண்களுக்காக தூத்துக்குடியில் முதன்முதலில் துவங்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஒன்றான தூய மரியன்னை கல்லூரியின் சிறப்பை எடுத்துக்கூறினார். பட்டம் பெறும் மாணவியர்கள் தங்கள் கல்வியின் மதிப்பை உணர்ந்து தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், பெண்கள் நிர்வாகம், சட்டம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதிக்கக் கூடிய திறன் உடையவர்கள் என்பதால், சாதனையாளர்களை முன்மாதிரியாக கொண்டு சவால்களை தைரியமாக எதிர்கொண்டு முன்னேற வேண்டும் என்று அவர் ஊக்கமளித்தார்.
இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜெஸி பெர்னாண்டோ அவர்கள் தலைமை தாங்கி ஆண்டறிக்கையை வழங்கினார். தேர்வுக் கட்டுப்பாட்டு ஆணையர் அருட்சகோதரி ரீத்தா விழாவைத் துவக்கி வைத்தார். இதில் துணை முதல்வர்கள், அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இறுதியில் நாட்டுப்பணியுடன் விழா இனிதே நிறைவடைந்தது.