மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அமைச்சர் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் திருமதி கீதாஜீவன் அவர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதையடுத்து, இன்று (29.03.2026) சென்னை இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்த கீதாஜீவன் அவர்களுக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பணிக்குழு சார்பில் பாளையங்கோட்டை சாலையில் உள்ள எப்.சி.ஐ. குடோன் அருகே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகரில் உள்ள முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கு கீதாஜீவன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கலைஞர் அரங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கீதாஜீவன் தெரிவித்ததாவது:
“கடந்த ஐந்து ஆண்டு காலமாக முதல்வரின் பல்வேறு திட்டங்களை தொகுதிக்கு பெற்றுத்தந்துள்ளேன். எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தாலும், ஆளும் கட்சியில் இருந்தாலும் மக்களோடு நேரடி தொடர்பில் இருந்து சேவை செய்து வருகிறேன்.
எங்கள் கூட்டணி மிகவும் பலமான கூட்டணியாகும். வடக்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். பெண்களுக்கு உதவும் வகையில் ரூ.8000 கூப்பன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாஷிங் மெஷின் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அடிப்படையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மற்ற கட்சிகள் வெறும் அறிவிப்புகளையே வழங்கி வருகின்றன. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தூத்துக்குடிக்கு கூடுதல் தொழிற்சாலைகள் வர உள்ளன.
துறைமுக வளர்ச்சிக்கும் மாநில அரசு முக்கிய திட்டங்களை செயல்படுத்தும். வரும் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிமுக தொகுதியில் செயல்படவில்லை. எனவே, இந்தத் தேர்தலில் நிச்சயமாக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
தூத்துக்குடி பக்கிள் ஓடை திமுக ஆட்சியில்தான் சீரமைக்கப்பட்டது. மழைக்காலத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து ஆய்வு செய்தது மக்களுக்கு தெரியும். எனது பிரச்சாரத்திற்காக ஏப்ரல் 14ஆம் தேதி முதல்வர் தூத்துக்குடிக்கு வந்து வாக்கு சேகரிக்க உள்ளார்” என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில் பல்வேறு கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.