திரிபுரா அரசு, யுவ விகாஸ் கேந்திரா மற்றும் பஜாஜ் பவுண்டேஷன் இணைந்து நடத்தும் சர்வதேச பாரம்பரிய திருவிழா மிகுந்த வண்ணமயமாக அகர்தலாவில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நேஷனல் சோசியல் ஆர்கனைஷேசன் சார்பாக, அதன் மாநில தலைவர் முனைவர் ஜெ. நாகராஜன் (உதவி பேராசிரியர், காமராஜ் கல்லூரி), மற்றும் தூத்துக்குடி கலையும் கல்வியும் சகா கலைக்குழு, தமிழக கலாச்சார பாரம்பரிய கலைஞர்கள் இணைந்து சிறப்பாக பங்கேற்றனர்.

திரிபுரா மாநில முதல்வர் மாண்புமிகு முனைவர் மாணிக் ஷா அவர்கள் இந்த விழாவை துவக்கி வைத்தார். இந்தியாவின் 26 மாநிலங்களும், மேலும் தெற்கு சூடான், பப்புகினியா, நேபாள், இலங்கை, லிபியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் மேடை அலங்கரித்து விழாவை சர்வதேச நிறப்பூச்சுகளால் கொண்டாட்டமாக மாற்றினர்.

இதற்கு முன்னதாக அகர்தலாவில் நடைபெற்ற இந்திய ஒருமைப்பாடு பேரணியில், தமிழக சகா கலைக்குழுவினர் ஆடிய கட்டை கால், ஒயிலாட்டம் போன்ற பாரம்பரிய நடனங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பேரணியில் பங்கேற்றவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இவர்களின் தமிழ்த் திருவிழியையும், பாரம்பரிய ஆட்டங்களையும் கண்டு அடிக்கடி கைத்தட்டிச் சிறப்பித்தனர்.

26ஆம் தேதி வரை நடைபெறும் இந்த சர்வதேச பாரம்பரிய திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் யுவ விகாஸ் கேந்திரா – திரிபுரா மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்துள்ளது. உலக கலாச்சாரங்களை ஒன்றுபடுத்தும் இந்த நிகழ்வில் தமிழகத்தின் சகா கலைக்குழுவின் பங்கேற்பு பெருமையை ஏற்படுத்தியுள்ளது.