தமிழக அளவில் சமூகநலத் துறை வழியாக மகளிர், குழந்தைகள், மாணவிகள், திருநங்கைகள் நலனுக்காக தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னேற்ற பணிகள் குறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மாண்புமிகு கீதாஜீவன் அவர்கள் பெருமையாக தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், “மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து, மகளிர் மற்றும் குழந்தைகள் நலனுக்கான பல புதிய திட்டங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானதாக, போக்ஸோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 நபர்களுக்கு ரூ.103.62 கோடி நிவாரணம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

கல்வி மற்றும் மாணவிகள் நலன் :-

2022–2023 கல்வியாண்டில் தொடங்கிய “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் உயர்கல்வி உறுதித் திட்டம்” மூலம் இதுவரை 5,29,728 மாணவிகள் மாதம் ரூ.1,000 வீதம் பெற்று கல்வி கற்கின்றனர். அதேபோல் 2024–2025ல் தொடங்கிய “தமிழ்ப்புதல்வன்” திட்டம் மூலம் 3,92,449 மாணவர்கள் மாதம் ரூ.1,000 வீதம் பெறுகின்றனர்.

ஊட்டச்சத்து மற்றும் விடுதி வசதிகள் :-

“ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டு, 75,000 குழந்தைகளின் உடல்நலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 19 “தோழி விடுதிகள்” தற்போது செயல்படுகின்றன; மேலும் 26 புதிய விடுதிகள் கட்டுமானத்தில் உள்ளன.

திருமண நிதியுதவி & திருநங்கைகள் நலன் :-

2021–2025 வரை 1,39,609 பயனாளிகள் ரூ.1,174 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி பெற்றுள்ளனர். சுயதொழில் ஊக்கத்திட்டத்தின் கீழ் 811 பேருக்கு ரூ.4 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியம் ரூ.1,000 இலிருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டு 1,760 பேர் பயன் பெறுகின்றனர்.

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு :-

2022 முதல் தொடங்கிய குழந்தைகள் நலத் திட்டங்களின் கீழ் 34,987 பள்ளிகள் இணைக்கப்பட்டு சுமார் 20 லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.
பெற்றோர்களை இழந்த 6,910 குழந்தைகள் மாதம் ரூ.2,000 பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த 402 குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள் & நகர வளர்ச்சி :-

மழைநீர் வடிகால், குடிநீர், திடக்கழிவு, சாலைகள், தெருவிளக்குகள் உள்ளிட்ட பணிகளுக்கு 2025–2026ல் ரூ.73.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
110 கோடி மதிப்பில் சிறப்பு மகப்பேறு மருத்துவமனை இறுதிக்கட்டத்தில் உள்ளது. மாநகரம் முழுவதும் 650 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் மினி டைடல் பார்க், வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளன.

குடிநீர், விவசாயம் மற்றும் சுற்றுலா :-

ரூ.930 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. உப்பாத்து, முள்ளக்காடு, செங்குளம் உள்ளிட்ட ஓடைகள் தூர்வாரப்பட்டு நீர்வழி மேம்படுத்தப்பட்டுள்ளது. கடல்சார் விளையாட்டு மையத்துக்கு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் தொழிலாளர் நலன் :-

இல்லத்தரசிகளுக்கான மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி, மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5,000 இலிருந்து ரூ.8,000 உயர்வு, முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை, அத்துடன் 3,000 கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

“சமூகநல முன்னேற்றத்தில் தூத்துக்குடி முன்னணி மாவட்டம்”


மாநில அரசு மகளிர், குழந்தைகள், திருநங்கைகள் மற்றும் முதியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, சமூக சமத்துவத்தின் புதிய யுகத்தை தொடங்கியுள்ளது என்று அமைச்சர் கீதாஜீவன் வலியுறுத்தினார். “கடந்த நான்கு ஆண்டுகளில் சமூகநலத்துறை வழியாகவும், அடிப்படை கட்டமைப்புகள் வழியாகவும் தூத்துக்குடி வளர்ச்சி பெற்றிருப்பது பெருமைமிகு சாதனை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.