“நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம்” என்ற அரசியல் கட்சிக்கு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கியதைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சித் தலைவர் டி.பி.எஸ். பொன் குமரன், பொதுச் செயலாளர் வழக்கறிஞர் அருணா தேவி, ரமேஷ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, நிர்வாகிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.


இந்த கட்சி தூத்துக்குடியில் துவங்கப்பட்டதுடன், வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் நேரடியாக களம் இறங்கும் வகையில் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது. கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களின் விருப்ப மனுக்களை கட்சி அலுவலகம் அல்லது நிர்வாகிகள் மூலமாக சமர்ப்பிக்கலாம் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


பின்னர் பேசிய கட்சித் தலைவர் டி.பி.எஸ். பொன் குமரன் மற்றும் பொதுச் செயலாளர் அருணா தேவி தெரிவித்ததாவது: “எங்கள் கட்சியின் முக்கிய இலக்குகள் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பது, டாஸ்மாக் கடைகளை மூடுவது, கல்வியை மேம்படுத்துவது, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது ஆகியவை. மேலும் அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணும் புதிய நடைமுறைகளை கொண்டு வர வேண்டும்.


ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். அதேபோல், ஒரு வேட்பாளர் இரண்டு முறை வெற்றி பெற்ற பிறகு மீண்டும் போட்டியிட முடியாத வகையில் சட்ட மாற்றம் கொண்டு வர வேண்டும். தேர்தலுக்கு முன் மக்கள் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து முழுமையான தகவல்களை அறிந்து, மக்களுக்காக நேர்மையாக பணியாற்றக்கூடிய நபரை தேர்வு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தனர்.


மேலும், “இந்தியாவின் பல மாநிலங்களில் எங்கள் கட்சி பணிகளை தொடங்கி விரிவாக்கம் செய்து வருகிறது. புதிய மாற்றத்தை நோக்கி பயணிக்கும் இந்த கட்சியில் சேவை செய்ய விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் இணைந்து கொள்ளலாம்” எனவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.