2023ஆம் ஆண்டு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் மிக தீவிரமாக பாதிக்கப்பட்டன. இந்த பேரிடரில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்ததுடன், பலர் உயிரிழந்தனர்.


இந்த நிலையில், அந்த காலகட்டத்தில் நடைபெற்ற நிவாரண பணிகளைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என பாஜக தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர், 2023 வெள்ளத்தின் போது பாஜக எந்த உதவியும் செய்யவில்லை என கூறி வருவது உண்மைக்கு புறம்பானது மற்றும் அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்ட பிரச்சாரம் என விமர்சிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து பாஜக தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவர் சத்தியசீலன் வெளியிட்ட அறிக்கையில், பேரிடர் நேரத்தில் மத்திய அரசின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றியதாக கூறப்பட்டுள்ளது. அவர்களின் செயல்பாடு இல்லையெனில் உயிரிழப்புகள் மேலும் அதிகரித்திருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், பாஜக நிர்வாகிகள் தங்களது சொந்த செலவில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தினமும் மூன்று வேளை உணவு, உடைகள், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கியதாகவும், ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகளும் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கி பாதுகாப்பாக மீட்டதும் பாஜக நிர்வாகிகளே எனவும், சேவா பாரதி அமைப்பின் மூலம் தூத்துக்குடியில் பல இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இத்தகைய செயல்பாடுகளை மறைத்து திமுக தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும், பேரிடர் நேர சேவையை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவது மனிதநேயத்திற்கு எதிரானது எனவும் சத்தியசீலன் கடுமையாக விமர்சித்துள்ளார். பேரிடர் நேரத்தில் மக்கள் நலனுக்காக பணியாற்றியவர்களை குறை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதற்கான தீர்ப்பை மக்கள் தகுந்த நேரத்தில் வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.