புதூர் வட்டார விவசாயிகள் மற்றும் கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் சார்பாக, புதூர் வட்டார வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.


கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் பெய்த பெருமழையால் பாதிக்கப்பட்ட வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, உளுந்து, பாசிப் பயறு உள்ளிட்ட பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், விவசாயி எத்தனை ஏக்கர் பயிரிட்டிருந்தாலும் அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை விவசாயிகள் கடுமையாக கண்டித்தனர். பாதிக்கப்பட்ட முழு பரப்பிற்கும் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.


மேலும், பயிர் காப்பீடு தற்போது மக்காச் சோளத்திற்கு மட்டுமே வழங்கப்படுவதால், வெள்ளைச் சோளம், வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி உள்ளிட்ட பிற பயிர்களுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என்றும், விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


இந்த முற்றுகை போராட்டம் மூத்த விவசாயி சேதுபாண்டி தலைமையில் நடைபெற்றது. இதில் கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன், வட்டார விவசாயிகள் சங்க தலைவர் பிரசாத், செயலர் அண்ணாத்துரை, பால்ராஜ், மோகன், விஜயகுமார், பெருமாள்சாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன், உதவி இயக்குநர் மலர்விழி, உதவி இயக்குநர் (இன்சூரன்ஸ்) அணி, தோட்டக்கலை அலுவலர் பிரவினா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகளின் கோரிக்கைகளை அரசிடம் எடுத்துச் சொல்லுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.


இதனைத் தொடர்ந்து, அரசு உரிய உதவிகளை வழங்காவிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என எச்சரிக்கை விடுத்து விவசாயிகள் போராட்டத்தை கலைத்து சென்றனர்.