தூத்துக்குடி முத்தையாபுரம் எம்டிஏ காலனி பகுதியில், தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் ரூ.84.50 இலட்சம் மதிப்பீட்டில் பெண்களுக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்ட “மகளிர் பூங்கா” (பிங்க் பார்க்) இன்று திறந்து வைக்கப்பட்டது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி இந்த பூங்காவை திறந்து வைத்தார்.
இந்த பிங்க் பூங்காவில் பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் யோகா பயிற்சிக் கூடம், ஸும்பா பயிற்சி பகுதி, சிலம்பம் பயிற்சி, இறகுப் பந்து மைதானம், குளிர்சாதன வசதியுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம், டென்னிஸ் மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி பேசுகையில், “இந்த பிங்க் பார்க் முழுமையாக பெண்களுக்கான பாதுகாப்பான இடமாக அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களது உடல்நலத்தைப் பற்றிக் கவலைப்படக் கூடாது என்ற மனநிலையுடன் வளர்க்கப்படுவது சமூகத்தில் நீண்ட காலமாக நிலவி வருகிறது. ஆனால் இங்கு பெண்கள் எந்த அச்சமும் இல்லாமல் யோகா, ஸும்பா, சிலம்பம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது பெரும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது” என்றார்.
மேலும், “பெண்களுக்கு பாதுகாப்பான இடங்கள் மிக அவசியம். இந்த பிங்க் பார்க் பெண்கள் தங்களைப் பற்றி கவலைப்படவும், மனதிலுள்ள எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளது. திமுக ஆட்சி பெண்களுக்காக முக்கியத்துவம் அளிக்கும் ஆட்சியாக செயல்பட்டு வருகிறது. பேருந்து பயணம், கல்வி, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பெண்களின் வாழ்க்கையில் நேரடி மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன” என்றும் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் மக்கள் பயன்பாட்டிற்காக அதிகமான பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், மழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளும் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.