தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனை கூட்டம், எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ராமலட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி வரவேற்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், “பெண்கள் வாழ்க்கையில் பொியார் கொண்டு வந்த சிந்தனையை, கலைஞர் சட்டமாக்கினார். அதனால் சொத்தில் சம உரிமை, வேலைவாய்ப்பில் முக்கியத்துவம், 33 சதவீத இடஒதுக்கீடு, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என படிப்படியாக பெண்கள் ஆண்களுக்கு நிகராக உயர்ந்துள்ளனர். திமுக ஆட்சியில் பெண்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையின் பயனாகவே இன்று பொதுவாழ்வில் பெண்கள் உயர்ந்த பதவிகளில் அமர முடிகிறது” எனத் தெரிவித்தார்.

மேலும், திமுக ஆட்சியில் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 ஆகிய திட்டங்கள் மூலம் தமிழகம் முழுவதும் 1.30 கோடி பெண்கள் பயனடைந்து வருவதாகவும், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி, தொழில்முனைவோருக்கான மானியக் கடன்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு துணை நிற்கின்றன என்றும் கூறினார்.

“பெண்கள் வாழ்வு உயர்ந்தால் தமிழ்நாடு உயரும்” என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கொள்கையை முன்னெடுத்து, 2026 தேர்தலிலும் மகளிர் அணி ஒற்றுமையுடன் செயல்பட்டு திமுக வெற்றிக்காக பாடுபட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

கூட்டத்தில், கனிமொழி எம்.பி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மறைந்த மாநகர மகளிர் அணி தலைவர் பாப்பாத்தி நினைவாக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் மகளிர் அணி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.