பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு, வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி மாநகரில் அமைதிப் பேரணி மற்றும் அவரது திருவுருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக மாவட்டக் கழக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் அவர்கள் அறிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்த காஞ்சித் தலைவர், உலகத் தமிழர்களின் உள்ளங்களில் தமிழ்ச்செருக்கோடு வீற்றிருக்கும் பேரறிஞர் அண்ணா, தமிழ் மொழியின் உயர்விற்காகவும் தமிழ் மக்களின் மேம்பாட்டிற்காகவும் தம் வாழ்நாளெல்லாம் ஓயாது உழைத்த உத்தமர் ஆவார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்து, தமிழகத்திற்கு “தமிழ்நாடு” என்ற பெயரை சூட்டிய தலைமகனாகவும், “தென்னாட்டு பெர்னாட்ஷா” என அனைவராலும் போற்றப்பட்டவராகவும் பேரறிஞர் அண்ணா விளங்குகிறார்.


அவர்களின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு, பிப்ரவரி 3ஆம் தேதி காலை 9 மணிக்கு, தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் உள்ள ராஜாஜி பூங்கா முன்பிருந்து அமைதிப் பேரணியாக புறப்பட்டு, புதிய மாநகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.


மேலும், அன்றைய தினம் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழக அமைப்புகள் சார்பாகவும், பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்த வேண்டும் என்றும், முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களை உறுதிமொழியாக ஏற்க வேண்டும் என்றும் அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக் கொண்டுள்ளார்.


முத்தமிழறிஞர் கலைஞரின் ஐம்பெரும் முழக்கங்கள் :


அண்ணா வழியில் அயராது உழைப்போம்.


ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.


இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.


வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்.


மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.


இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.