திருச்செந்தூரிலிருந்து சேலம் சென்ற அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் பராமரிப்பில்லாத ஏ.சி., பழுதானதால் பெண்கள் குழந்தைகள் அவதிப்பட்டனர். தூத்துக்குடியில் பயணிகள் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின் மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் சென்றனர்.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் ஏ.சி., வசதியுடன் கூடிய சொகுசு பஸ் நேற்று பிற்பகல் 2 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து சேலம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் ஏ.சி., வேலை செய்யவில்லை, பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏ.சி., பஸ் என்பதால் ஜன்னல் திறக்க முடியாமல் பெண்கள் சிறுவர்கள், சிறுமிகள், குழந்தைகள் மூச்சு முட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாகனத்தின் ஓட்டமும் சீராக இல்லை, டிரைவர், கண்டெக்டர் உடன் பயணிகள் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கண்டக்டர், டிரைவர் தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் பஸ்சை தூத்துக்குடி டெப்போவிற்கு ஓட்டு வர சொல்லி உள்ளனர். பயணிகளுடன் பஸ் மாலை 4 மணிக்கு தூத்துக்குடி பஸ் டிப்போ வந்தது.

உடனடியாக பஸ்சை விட்டு இறங்கிய பயணிகள் டெப்போவின் கதவை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பயணிகளின் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் புறப்பட்டு சென்றனர். சொகுசு ஏ.சி. என பெயர் வைத்துக் கொண்டு டப்பா பஸ்களை இயக்குவதாக பயணிகள் புலம்பியவாறு சென்றன.

அரசு அதிகாரியான பயணி ஒருவர் கூறுகையில் பிற்பகல் 2 மணிக்கு திருச்செந்தூரில் பஸ் ஏறினேன். ஏ.சி. வேலை செய்யவில்லை, பஸ்ஸின் ஓட்டமும் சீராக இல்லை, ஆங்காங்கே நின்றதால் எங்களுக்கு பயம் ஏற்பட்டது. பஸ் கட்டணமாக ரூபாய் 300 முதல் 612 வரை செலுத்தியும் இந்த ஆபத்தான பயணமா என்ற கேள்வி எழுந்தது.

காற்றோட்டம் இல்லாததால் குழந்தைகள் சிறுவர், சிறுமிகள் மூச்சுத்திணறினர். பின்னர் மாற்று ஏற்பாடு செய்து பஸ்சில் அனுப்பினர். ஒரு பஸ்ஸில் பிரச்சனை என்றால் அதனை ஏன் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர் என்ற கேள்வி எழுகிறது என்றார்.

ஹை கோர்ட் வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில் பஸ் பழுது என்றால் கட்டணத்தை திருப்பி செலுத்த வேண்டும். மாற்று பஸ் ஏற்பாடு செய்ய வேண்டும். இரண்டுமே செய்யவில்லை நிர்வாக சீர்கேடு என சொல்ல முடியாது. நிர்வாகமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். என்றார் தொலைதூரம் செல்லும் பஸ்களை முறையாக பராமரித்து இருந்தால் பயணிகளுக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. போராட்டத்திற்கு பின் மாற்று ஏற்பாடு என்பது பயணிகள் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.