திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசி மாத 9-ம் நாள் திருவிழாவில் நடைபெறும் பாரம்பரிய கட்டபொம்மன் நாயக்கர் மண்டகப்படி விழாவை, வழக்கம்போல கட்டபொம்மன் மடத்தில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ம.அன்புமணி அவர்கள், பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயம் ஆலயக் குழுவினருக்கும், கட்டபொம்மன் நேரடி வாரிசு வி.வீமராஜா அவர்களுக்கும் அதிகாரப்பூர்வ அனுமதி கடிதத்தை வழங்கினார்.
1201ம் ஆண்டு விசுவாவசு வருடம் மாசி மாதம் 17ம் தேதி (01.03.2026) ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை 4.00 மணியளவில், திருச்செந்தூர் கட்டபொம்மன் நாயக்கர் மடத்தில் மாசி திருவிழாவின் 9-ம் நாள் கட்டபொம்மன் மண்டகப்படி விழா நடைபெற உள்ளது. பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த மரபு விழா, சமுதாய ஒற்றுமையின் அடையாளமாகவும், வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வரலாற்றை நினைவுகூரும் நிகழ்வாகவும் சிறப்பிடம் பெற்றுள்ளது.
இவ்விழாவை நடத்த இருந்த தடையாணை நீக்கப்பட்டதையடுத்து, பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக் குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மரபுப்படி மண்டகப்படியை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதற்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு கம்பளத்து நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்ததன் பின்னர், அறநிலையத்துறை மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இதனால் பல ஆயிரம் பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட்டதாகவும் ஆலயக் குழுவினர் தெரிவித்தனர்.
மரபையும், சமுதாய ஒற்றுமையையும் காக்கும் இந்த மண்டகப்படி விழாவில் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு செந்திலாண்டவரின் அருளைப் பெறுமாறு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.