தமிழ்நாடு முதலமைச்சரும் கழகத் தலைவருமான M. K. Stalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகர தி.மு.க சார்பில் மார்ச் 1, 2026 ஞாயிற்றுக்கிழமை முழுநாளும் பல்வேறு நலத்திட்ட மற்றும் சமூகப்பணித் தொடர் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 9 மணியளவில் பழைய பேருந்து நிலையம் அருகில் பிறந்தநாள் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில் நகரின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மதிய சிறப்பு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பகுதியாக நேசக்கரங்கள் சிறுவர் இல்லம் (பிரையண்ட் நகர் 1வது தெரு), பாசக்கரங்கள் (ஆட்டோ காலனி), காது கேளாதோர் பள்ளி (பிரையண்ட் நகர் 3வது தெரு), ஆறுமுகச்சாமி அன்பு ஆசிரமம் (தேவர்புரம் சாலை), ஹில் முதியோர் இல்லம் (டி.எம்.பி. காலனி), பிளசிங் முதியோர் இல்லம் (பி & டி காலனி), நியூ நேசக்கரங்கள் முதியோர் இல்லம் (பால்பாண்டி நகர்), புதிய பேருந்து நிலையம் ஆதரவற்ற முதியோர் இல்லம், அலாசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் லசால் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு உணவு வழங்கப்படுகிறது.
மாலை 4 மணியளவில் அரசு மருத்துவமனையில் அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பி. கீதா ஜீவன் தலைமையில் நடைபெறுகிறது. மாலை 6 மணியளவில் 43வது வட்டக் கழகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும், மாலை 7 மணியளவில் தஸ்நேவிஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரவு சிறப்பு உணவு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி மற்றும் வட்ட கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து சார்பு அணிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட, மாநகர, பகுதி கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தூத்துக்குடி மாநகர தி.மு.க சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.