தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

அதன்படி, கடந்த 15 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பலர் தங்களது தொகுதிகளில் போட்டியிடுவதற்காகவும், எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியும் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தெற்கு மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், வரும் 23 ஆம் தேதிக்குள் சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் விருப்ப மனு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடியைச் சேர்ந்த அதிமுக மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளரும், தமிழ்நாடு–புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான வக்கீல் மைக்கேல் ஸ்டனிஸ் பிரபு, டூவிபுரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதனை சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார். பின்னர், சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது விருப்ப மனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தார்.