விளாத்திகுளம் தாலுகா பனையூர் கிராமத்தைச் சேர்ந்த வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி லதா, மாநில அளவில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். கூலி தொழிலாளியின் மகளான இவர் தனது விடாமுயற்சி மற்றும் திறமையால் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
சொந்த வீடு இல்லாத நிலையில் வாழ்ந்து வந்த மாணவி லதா, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டும் என்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயனை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
மாணவியின் நிலைமையை கவனத்தில் கொண்ட எம்.எல்.ஏ மார்கண்டேயன், உடனடியாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.