தூத்துக்குடியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புத்தகப் பார்வை மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநகர கிளை செயலாளர் தோழர் ஆ.மாரிமுத்து வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் ஐ.பெ.பாலசேகர் தலைமை வகித்து உரையாற்றினார். அவர் தனது உரையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பணிகள், தோழர் ஜீவாவின் சமூகப் பங்களிப்பு மற்றும் மகளிர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கமாக பேசினார்.


தூத்துக்குடி மாவட்ட ரோட்டரி சங்க தலைவர் மற்றும் தொழிலதிபர் ரோட்டரி டி.மலர்விழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தனது உரையில் பெண்களின் முன்னேற்றம், சமூகத்தில் பெண்களின் பங்கு, தெளிவு, தைரியம், நேர்மை மற்றும் நன்றியுணர்வு போன்ற பண்புகள் பெண்களை உயர்வுக்கு கொண்டு செல்லும் என்பதை வலியுறுத்தி பேசினார்.


“பேத்தி கேட்ட கதை” எனும் சிறுகதை நூல் குறித்து புத்தகப் பார்வை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏ.பி.சி. மகாலெட்சுமி கல்லூரி கணிதவியல் மாணவிகள் தேவி மற்றும் துர்கா தேவி ஆகியோர் அந்த நூலை வாசித்து தாங்கள் உணர்ந்த கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.


எழுத்தாளர் பேராசிரியர் கணியன் செல்வராஜ் ஏற்புரையாற்றிய போது, மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்றும் வன உயிர்களை பாதுகாப்பது அவசியம் என்றும் தெரிவித்தார். அனைத்து உயிரினங்களும் நல்லவையே; வன உயிர்களிடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை பல உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.


இந்த நிகழ்ச்சியில் இலக்கிய ஆர்வலர்கள் செல்ல மாரியப்பன், லோகநாதன், பத்மநாதன், பாலமுருகன், ஆசிரியர் ராஜகுமார் சாமுவேல், குமிழ்முனை சைமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தமிழ்நாடு கலை இலக்கியப் பேரவை தருவைக்குளம் செயலாளர் தோழர் லாரன்ஸ் நன்றியுரையாற்றினார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தாளமுத்துநகர் செயலாளரும் புத்தக வாசிப்பு நற்பணி மன்ற அமைப்பாளருமான தோழர் அ.ரவி மற்றும் ஸ்பிக் செல்வின் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.