தூத்துக்குடி வடக்கு மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக ஓபிஎஸ் அணியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பூர் சீனி (எ) ராஜகோபால் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சொரிமுத்து, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், விளாத்திகுளம் நகரச் செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் இணைந்தனர். இந்த இணைப்பு நிகழ்வு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் முன்னிலையில் நடைபெற்றது. அரசியல் தரப்பில் இது அவரின் திட்டமிட்ட முன்னெடுப்பு என்றும், தொகுதியில் கட்சியின் அமைப்பு வலிமையை அதிகரிக்கும் வகையிலான முக்கிய நகர்வாகவும் பார்க்கப்படுகிறது.
நிகழ்வில் விளாத்திகுளம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தகவல் தொழில்நுட்ப அணி, இளைஞரணி, மாணவர் அணி மற்றும் அயலக அணி நிர்வாகிகளும் திரளாக பங்கேற்று புதிய இணைப்பை உற்சாகமாக வரவேற்றனர். இந்த நிகழ்வு, விளாத்திகுளம் தொகுதியில் திமுகவின் அரசியல் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் என கூறப்படுகிறது.