தூத்துக்குடி மாநகர் டூவிபுரத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மாநில வர்த்தக அணி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் கூறியதாவது:


“நேற்று தமிழக அரசு அறிவித்ததாக கூறப்படும் ₹5000 மகளிர் உரிமைத் தொகை திட்டம் தேர்தலை முன்னிட்டு மக்களின் கவனத்தை திருப்பும் முயற்சிதான். மின்சார கட்டண உயர்வு, விலைவாசி ஏற்றம், நிறைவேறாத வாக்குறுதிகள் போன்ற பிரச்சினைகளால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இவ்வாறு திடீர் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இது நிரந்தர நலத்திட்டமா அல்லது அரசியல் நாடகமா என்பதை மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள்,” என்றார்.


கழகத்தின் பொதுச் செயலாளரும், 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் பொற்கால ஆட்சி அமைக்கப் போகும் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் வாழ்த்துகளுடன் இந்த அலுவலகம் திறக்கப்படுகிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என்பது உறுதி.


அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டன. பெண்கள், விவசாயிகள், சிறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 2016ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பலவும் நிறைவேற்றப்பட்டன; அதேபோல் எதிர்வரும் 2026 தேர்தலிலும் அறிவிக்கப்படும் முக்கிய வாக்குறுதிகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும்.


மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த புரட்சித் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் புரட்சித் தலைவி ஜே. ஜெயலலிதா அவர்களின் ஆசியுடன் அதிமுக மீண்டும் தமிழகத்தில் பொற்கால ஆட்சியை வழங்கும். “மக்களின் தீர்ப்பே இறுதி. 2026ல் தமிழக மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தி, அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவார்கள்,” என்று சி.த. செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.