சாலை விபத்து தொடர்பான வழக்கை விசாரித்த போது போலியான வாகன காப்பீட்டு பாலிசி தயாரித்து மோசடி செய்த கும்பல் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே பாறைக்குட்டத்தைச் சேர்ந்த பால்பாண்டி (இசக்கிமுத்து மகன்) கடந்த 20.02.2024 அன்று நடந்த சாலை விபத்தில் காயமடைந்தார். இந்த விபத்து தொடர்பாக மணியாச்சி காவல் நிலையத்தில் குற்ற எண் 08/2024 என்ற வழக்கு இந்திய தண்டனைச் சட்டம் 279 மற்றும் 337 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
இந்த விபத்தில் TN 69 BP 2025 என்ற பதிவெண் கொண்ட பஜாஜ் பிளாட்டினா இருசக்கர வாகனமும், TN 31 H 4473 என்ற பதிவெண் கொண்ட டாடா மோட்டார்ஸ் நான்கு சக்கர வாகனமும் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பால்பாண்டி மோட்டார் வாகன விபத்து காப்பீடு பெறுவதற்காக MCOP No.795/2024 என்ற மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் விபத்து ஏற்படுத்தியதாக கூறப்பட்ட நான்கு சக்கர வாகனத்திற்கு HDFC ERGO General Insurance Company Limited நிறுவனத்தின் காப்பீடு இருப்பதாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதனை ஆய்வு செய்த HDFC ERGO General Insurance Company Limited நிறுவனத்தின் மேலாளர் ராஜேஸ், சமர்ப்பிக்கப்பட்ட காப்பீட்டு பாலிசி போலியானது என்று கண்டறிந்து மணியாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் குற்ற எண் 43/2025 என்ற வழக்கு இந்திய தண்டனைச் சட்டம் 465, 468 மற்றும் 471 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
மேலும் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநரின் செயல்முறை ஆணை அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் காப்பீடு தொடர்பான சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஆர். ஜெயந்தி விசாரணை செய்தபோது, இணையதளம் மூலம் நான்கு சக்கர வாகனத்தின் பதிவெண்ணை இருசக்கர வாகனமாக மாற்றி பதிவு செய்து, அதற்கான குறைந்த கட்டணத்தை செலுத்தி உண்மையான காப்பீட்டு பாலிசியை பெற்றுக்கொண்டு பின்னர் அதில் வாகன உரிமையாளர் பெயர், முகவரி, வாகன வகை உள்ளிட்ட விவரங்களை மாற்றி போலியான காப்பீட்டு பாலிசிகளை தயாரித்து வழங்கியிருப்பது தெரியவந்தது.
இந்த முறையில் 2020ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலியான காப்பீட்டு பாலிசிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுபோன்ற மோசடி தொடர்பாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டியைச் சேர்ந்த சங்கரலிங்கம் (கணேசன் மகன்), கழுநீர்குளத்தைச் சேர்ந்த தங்கராஜ் (பக்திபாண்டியன் மகன்), திருநெல்வேலி மாவட்டம் இத்திகுளத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி (அருணாசலம் மகன்), தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரைச் சேர்ந்த பாலமுருகன் (தங்கராஜ் மகன்) மற்றும் செந்தில்வேல்முருகன் (செந்தூர்பாண்டி மகன்) ஆகியோர் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.