தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 1-ல் உள்ள கங்கா பரமேஸ்வரி நகர் மாநகராட்சி பூங்கா பராமரிப்பு இல்லாமல் அடர்ந்த புதர்களால் சூழப்பட்டு காடுபோல் மாறியுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.


இந்த பூங்கா பகுதியில் பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதைகள் மற்றும் குழந்தைகள் விளையாட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது நடைபாதைகள் முழுவதும் அடர்ந்த முள்செடிகள் மற்றும் புதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


பல மாதங்களாக எந்தவித பராமரிப்பும் செய்யப்படாததால் பூங்கா முழுவதும் காடுபோல் காட்சி அளித்து வருகிறது. மேலும் பூங்காவின் பின்புறப் பகுதியில் மழைநீர் இன்னும் அகற்றப்படாமல் தேங்கி காணப்படுகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும், விஷ ஜந்துக்கள் மற்றும் பாம்புகள் போன்றவை தோன்றி அருகிலுள்ள வீடுகள் மற்றும் பூங்காவிற்கு வரும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


மக்களின் ஓய்வு நேரத்தை கழிக்கவும், குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடவும் அமைக்கப்பட்ட இந்த பூங்கா மாநகராட்சியின் அலட்சியமான அணுகுமுறையால் தற்போது பயமுறுத்தும் இடமாக மாறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதுகுறித்து தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் காளி ராஜா கூறுகையில், மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள கங்கா பரமேஸ்வரி நகர் மாநகராட்சி பூங்கா பல மாதங்களாக பராமரிப்பு இல்லாமல் காடுபோல் மாறியுள்ளதாகவும், நடைபாதைகள் புதர்களால் மூடப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவித்தார்.


மேலும் பூங்காவின் பின்புறத்தில் தேங்கியுள்ள மழைநீர் சுகாதாரப் பிரச்சினையை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதுடன் விஷ ஜந்துக்கள் தோன்றும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.


எனவே மக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்து பூங்காவை முழுமையாக சுத்தம் செய்து, புதர்களை அகற்றி, தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றி, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.