2026 தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தி சகா கலைக்குழு நிறுவனர், கலை வளர்மணி கலை பேராசிரியர் சகா சங்கர் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் அவர் கூறியதாவது: 2026 தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் அலட்சியமாக இருக்காமல் கவனமாக செயல்பட வேண்டும். பொதுமக்களின் அலட்சியத்தால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் காலங்களில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்வது வழக்கம். குறிப்பாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குடும்ப விழாக்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக பணம் கொண்டு செல்லும் போது அதற்கான தகுந்த ஆதாரங்களை உடன் வைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு ஆதாரங்களுடன் பணத்தை கொண்டு சென்றால் காவல்துறையினரிடம் விளக்கமாக தெரிவித்து எந்த சிக்கலும் இல்லாமல் பயணம் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார். காவல்துறையினர் தங்களது கடமையை சரியாக மேற்கொள்வார்கள் என்பதால் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் தேர்தல் நேரங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் பல விதமான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்வார்கள். அந்த வீடியோக்களில் உள்ள தகவல்கள் உண்மையா பொய்யா என்பதை உறுதி செய்யாமல் அவற்றை பகிர வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்துள்ள முக்கியமான ஜனநாயக அதிகாரம். யாருக்கு வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை என்பதால் அதை பிறரிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதன் மூலம் தேர்தல் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதற்காக இந்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளதாக சகா சங்கர் தெரிவித்துள்ளார்.