தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 20வது வார்டின் பகுதி சபா கூட்டம் போல்பேட்டை கீதாஹாட்டல் ஹாலில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் மேயர் ஜெகன் பொியசாமி கூறியதாவது:

திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரசு பொறுப்பேற்ற பின்னர், ஊராட்சி பகுதியில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் போன்று மாநகராட்சி பகுதிகளில் பகுதி சபா கூட்டங்கள் நடைபெற வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவிட்டார். அதன்படி ஒவ்வொரு வார்டிலும் 5 பகுதி சபா உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்தப் பகுதியின் பொதுமக்கள் கோரிக்கைகள், குறைகள் ஆகியவற்றை பகுதி சபா கூட்டங்களிலும் மாநகராட்சி அலுவலர்களிடமும் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகத்திற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்ட 45 மாத காலத்தில், 60 வார்டுகளிலும் பொதுமக்கள் நலனை கருதி எந்த வகை பாரபட்சமுமின்றி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாதம் ஒருமுறை நடைபெறும் மாநகராட்சி கூட்டங்களில் மாமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். மேலும், 20 மாதங்களாக நான்கு மண்டல அலுவலகங்களிலும் ஒவ்வொரு புதன்கிழமையும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டதாகவும், தற்போது 60 வார்டுகளிலும் நடைபெறும் பகுதி சபா கூட்டங்கள் வழியாக மக்கள் அலுவலகங்களை தேடி செல்ல வேண்டிய நிலை மாறி, மக்கள் இருக்கும் இடத்துக்கே சென்று குறைகளை கேட்டறிந்து தீர்க்கும் நிலை உருவாகி இருப்பதாகவும் மேயர் தெரிவித்தார். தளபதி வழியில் திமுக ஆட்சியின் மக்கள் சேவை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

குடிநீர் சிரமம் இல்லாமல் சாலை, கால்வாய், மின்விளக்கு உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் அனைத்தும் முறைப்படுத்தப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி கடந்த காலத்தை விட மிகச் சிறந்த முன்னேற்றத்தில் உள்ளது என்றும் அவர் நினைவூட்டினார். மாநகராட்சி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பூக்கடை, கறிக்கடை, மீன்கடை போன்ற இடங்களில் வழங்கப்படும் பிளாஸ்டிக் பைகள் நீர்வழித் தடங்களில் அடைப்பை ஏற்படுத்தி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனை எதிர்காலத்தில் மேலும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

வளர்ச்சியே இலக்கு என்பதால் அனைவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும், எதிர்கால தலைமுறையின் நலனே முக்கியம் என்று மேயர் வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர் கணேசன், பகுதி சபா உறுப்பினர் ஐசக், வட்டச்செயலாளர் ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதி நாராயணன், வார்டு அவைத் தலைவர் அற்புதராஜ், வட்ட பிரதிநிதி அருணகிரி மற்றும் பொியசாமி, பாலசுப்பிரமணி, வசந்த், ஸ்ரீதரன், ராஜ்குமார், குமார், இசக்கி உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.