தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டக் கழக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு கழக வளர்ச்சி பணிகள் மற்றும் அடுத்தகட்ட செயல் திட்டங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார்.
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் மார்க்கண்டேயன் சட்டமன்ற உறுப்பினர், ஜெகன் பெரியசாமி, என். ராதாகிருஷ்ணன், மாநகர கழக செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் சுசி ரவீந்திரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் துறைமுகம் பிளாரன்ஸ், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, கோவில்பட்டி கிழக்கு நகர கழக செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள், ஒன்றிய மற்றும் பேரூர் கழக செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை பெறும் ஒரு கோடியே முப்பத்து ஒரு லட்சம் மகளிருக்கு மூன்று மாத உரிமைத் தொகையுடன் கோடைகால சிறப்பு தொகுப்பாக ரூபாய் ஐயாயிரம் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வரும் மார்ச் ஒன்று அன்று கழக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுதல், பிப்ரவரி இருபத்தொன்று அன்று மதுரையில் நடைபெற உள்ள தென் மண்டல பகுதி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பெருமளவில் கலந்து கொள்ளுதல், பிப்ரவரி இருபத்திரண்டு அன்று தூத்துக்குடி மற்றும் இருபத்திநான்கு அன்று கோவில்பட்டியில் நடைபெற உள்ள “தமிழ்நாடு தலைகுனியாது” தேர்தல் பரப்புரை கூட்டங்களை சிறப்பாக நடத்துதல், பிப்ரவரி இருபத்துமூன்று அன்று வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ளோர் யாரும் விடுபடாதவாறு தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளுதல் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட அளவில் கழக அமைப்பை மேலும் பலப்படுத்தி, வரவிருக்கும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுக்க அனைவரும் உறுதியெடுத்துக் கொண்டனர்.