மு. க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் வணிகவரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை சார்பில், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி முறப்பநாட்டில் ரூ.1 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சார் பதிவாளர் அலுவலகம் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.


புதிய அலுவலகக் கட்டிடம் பொதுமக்களுக்கு விரைவான மற்றும் சீரான சேவையை வழங்கும் வகையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் திறக்கப்பட்டதன் மூலம், முறப்பநாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களுக்கு பத்திரப் பதிவு சேவைகள் எளிதாக கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.


தொடர்ந்து முறப்பநாடு சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட பதிவாளர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகராஜா நயினார், கருங்குளம் ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, சுரேஷ் காந்தி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் சுரேஷ்குமார், வீரபாகு, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி சஞ்சய் ஆகியோர் மற்றும் பத்திர பதிவுத்துறை அலுவலர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.