தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி – மஹா காலபைரவர் சித்தர் பீடத்தில், தென் தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாத சிறப்பாக சிவபெருமான் குருமகாலிங்கேஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.


தை மாத பவுர்ணமியை முன்னிட்டு, குருமகாலிங்கேஸ்வரருக்கும் நந்திக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் மற்றும் அன்னத்தால் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து, அன்னத்தால் செய்யப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் குருமகாலிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினார்.


ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கவும், பக்தர்களின் வாழ்வில் செல்வச் செழிப்பு பெருகிடவும் வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி மற்றும் மஹா காலபைரவருக்கு யாகம் நடத்தப்பட்டதுடன், மஞ்சள், சந்தனம், இளநீர், பால் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன.


விழாவின் இறுதியில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மகளிர் அணியினரும், பக்தர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.