தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூரில் மீண்டும் ஒரு முறை தமிழரின் தொன்மையான கலாச்சார வரலாற்றை வெளிப்படுத்தும் முக்கியமான தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசால் தொல்லியல் களமாக அறிவிக்கப்பட்ட பட்டினமருதூர் பகுதியில் (சுமார் 300 ஏக்கர் பரப்பளவில்) ஊர்மக்கள் வாயிலாக 02.11.2025 அன்று அரிய சுடுமண் பெண் உருவம் மற்றும் இளைப்பு உபகரணம் எனப்படும் கல் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
5.4 செ.மீ உயரம் கொண்ட சுடுமண் பெண் உருவம் மார்பு பகுதி வரை மட்டும் முழுமையாக காணப்படுவதுடன், இரு கரங்கள் இல்லாத நிலையிலும் அழகிய ஆபரணங்கள், நயமிகு வேலைப்பாடுகள், சிரசில் அலங்கரிக்கப்பட்ட கொண்டை ஆகிய சிறப்புகளுடன் காணப்படுகிறது. ஆய்வாளர்களின் மதிப்பீட்டின்படி இதன் முழு உருவம் சுமார் 17–18 செ.மீ (7 அங்குலம்) உயரமுள்ளதாக இருந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
இந்த உருவ அமைப்பு நம் ஐம்பெரும் காப்பியங்களில் குறிப்பிடப்படும் தாய் தெய்வமான சம்பாபதி அம்மன் ஆலய சதுக்க பூதம் போன்று இருப்பதாகவும், இதேபோன்ற சுடுமண் சிற்பங்கள் பூம்புகார், கீழடி போன்ற தொல்லியல் தளங்களிலும் முன்பு கண்டெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் ஒப்படைத்த மற்றொரு முக்கிய பொருளாக சாய்வான முக்கோண வடிவில், வழுவழுப்பான கருப்பு நிறக் கல் (3.2 செ.மீ அகலம்) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு இளைப்பு உபகரணம் (அ) கை அடக்கமான கல் ஆயுதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பக்கவாட்டில் பாண்டிய அரசின் சின்னமான ‘ஒற்றை மீன்’ பொறிக்கப்பட்டதுடன், பிரதான பகுதியில் “வலபா...” என்று தொடங்கும் நான்கு உறுமாறிய பிற்கால வட்டெழுத்துக்கள் தென்படுகின்றன. கடைசி எழுத்து மட்டும் தெளிவாக அடையாளம் காண இயலாத நிலையில் உள்ளது. எழுத்து வடிவியல் அடிப்படையில் இதன் காலக்கட்டம் 8–9ம் நூற்றாண்டு காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அந்தக் காலகட்டத்தில் சீவ(ல்ல)லபன் என்ற பாண்டிய மன்னன் தமது ஆட்சியை வடக்கே திருச்சி வரையும், கிழக்கே இலங்கை வரையும் விரிவுபடுத்தி சிறந்த நீர் மேலாண்மை பணிகளை மேற்கொண்டார் என வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. இதனுடன் தொடர்புடைய சீவலப்பேரி என்ற இடப்பெயர் இன்று தாமிரபரணியுடன் சங்கமிக்கும் பகுதியில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மாவட்ட தொல்லியல் துறையின் பொறுப்பு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கூறுகையில் — “இவைகள் மிக முக்கிய ஆதாரங்களாக கருதப்படுகின்றன. பட்டினமருதூர் அகழாய்வு பணிக்கான ஒப்புதல் மத்திய தொல்லியல் குழுவினரால் வழங்கப்பட்டுள்ளது; விரைவில் கள ஆய்வைத் தொடங்குவோம்” என தெரிவித்தனர்.
தொல்லியல் ஆர்வலர்கள் கூறுகையில், இந்த மழைக்காலம் முடிவடையும் தருவாயில் தருவைக்குளம் – பட்டினமருதூர் பகுதி முழுவதும் தொடங்கவுள்ள அகழாய்வுகள் நம் தென்மதுரை எனக் கருதப்படும் இப்பகுதியின் தொன்மைச் செழிப்பை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டு 03.11.2024 அன்று சென்னை கிறித்தவக் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து பட்டினமருதூரில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு இக்கண்டுபிடிப்புக்கு வலுசேர்க்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது.
இத்தகவலைப் பொதுமக்களுக்கும், அரசுக்கும் கொண்டு சேர்த்த ஊடகங்கள் அனைத்திற்கும் மக்கள் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
– பெ. ராஜேஷ் செல்வரதி
வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர்
தூத்துக்குடி
தூத்துக்குடி
பட்டினமருதூரில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் பெண் தெய்வம் மற்றும் பாண்டிய சின்னமுடைய இளைப்பு உபகரணம் — தொல்லியல் வட்டாரத்தில் அதிர்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மக்கள் குரலை மௌனப்படுத்த முயற்சி — நெல்லையில் டாக்டர் வி. சுரேஷ் மீது தாக்குதல்!
அடுத்த
ஓட்டப்பிடாரத்தில் கல்வி வளர்ச்சிக்கு புதிய ஒளி – நபார்டு நிதியில் இரண்டு புதிய வகுப்பறைகள் திறப்பு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026