பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள கட்சியின் தொழிலாளர் அணி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க பேரவை மாநில தலைவர் ஏ.பி.தாமரை வெங்கடேசன் தலைமை வகித்தார்.


விழாவில் மாநில துணைத் தலைவர்கள் பெரியசாமி, சொர்ணம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ்.ஏ.சீதாலட்சுமி சிறப்பாக மேற்கொண்டிருந்தார்.


சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், தொழிலாளர் அணி அலுவலகம் முன்பு வண்ணக் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கல் பொங்கப்பட்டது. பொங்கல் பொங்கியதும் “பொங்கலோ பொங்கல்” என பெண்கள் குலவையிட்டு விழாவை கோலாகலமாக மாற்றினர்.


தொடர்ந்து உழவர் பெருமக்களை கௌரவிக்கும் விதமாக விவசாயிகளுக்கு புத்தாடை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க பேரவை மாநில தலைவர் ஏ.பி.தாமரை வெங்கடேசன் வழங்கினார். பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.


சமத்துவம், ஒற்றுமை மற்றும் உழைப்பாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த சமத்துவ பொங்கல் விழா, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.