30.01.2026 இன்று காலை திருநெல்வேலி ஜங்ஷன் ஹோட்டல் ஆரியாஸில் நடைபெற்ற சந்திப்பில், 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக தயாரிக்கப்படவுள்ள தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கில், அகில இந்திய தொழிற்சங்கம் சார்பில் முக்கிய வளர்ச்சி கோரிக்கைகள் அடங்கிய மனு சமர்ப்பிக்கப்பட்டது.


இந்த கோரிக்கை மனுவை அகில இந்திய தொழிற்சங்கப் பொதுச் செயலாளர் S.சுரேஷ்குமார் மற்றும் முன்னாள் தலைவர் T.R.தமிழரசு ஆகியோர் இணைந்து, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதியிடம் வழங்கினர்.


தூத்துக்குடி மற்றும் தென் தமிழகத்தை தொழில், வர்த்தகம், போக்குவரத்து, கல்வி, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் ஆராய்ச்சி துறைகளில் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் மொத்தம் 26 முக்கிய கோரிக்கைகள் இந்த மனுவில் இடம்பெற்றிருந்தன.


அதில், ஏர்கார்கோ ஹப் மற்றும் சர்வதேச விமான நிலையம் அமைத்தல், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை டிரான்ஷிப்மென்ட் துறைமுகமாக மேம்படுத்துதல், கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றுதல், சென்னை–தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி கன்னியாகுமரி எட்டுவழிச் சாலை திட்டம், வடக்கு–தெற்கு பிரத்யேக ரயில்வே சரக்கு நடைபாதையை தூத்துக்குடி வரை நீட்டித்தல் போன்ற முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.


மேலும், ரயில்வே இருப்புப்பாதைக்கு இணையான சாலை வசதி, கடல் நீரை நன்னீராக்கும் தொழிற்சாலை, தூத்துக்குடியில் வர்த்தக மையம், தகவல் தொழில்நுட்ப பூங்கா, செயற்கை நுண்ணறிவு பூங்கா, ஃபின்-டெக் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு மையங்கள், மருத்துவ தொழில் நுட்பம் மற்றும் உயிரி தொழில் நுட்ப ஆராய்ச்சி மையங்கள், திறன் மேம்பாட்டு மையம், நவீன டிரக் டெர்மினல், மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் உள்ளிட்ட தொழில் வளர்ச்சி திட்டங்களும் கோரிக்கைகளில் இடம் பெற்றன.


தூத்துக்குடி சிப்காட் சொத்து வரியின் இரட்டை வரியை நீக்க வேண்டும், பெரும் வெள்ளங்களுக்கு நிரந்தரத் தீர்வாக மேம்படுத்தப்பட்ட வடிகால் உள்கட்டமைப்பு, நீர்த்தேக்கங்கள், நில பயன்பாட்டு திட்டமிடல், சமூக விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைந்த செயல்திட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.


அதேபோல், தூத்துக்குடிக்கு மெட்ரோ ரயில் இணைப்பு, தூத்துக்குடி–சென்னை வந்தே பாரத் ரயில், செங்கோட்டை புனலூர் வழியாக தூத்துக்குடி–எர்ணாகுளம் அதிவிரைவு ரயில், கடல் சுற்றுலாத் தளம், கோளரங்கம், தூத்துக்குடி திருநெல்வேலி இடையே விளையாட்டு நகரம் அமைத்தல் உள்ளிட்ட எதிர்கால வளர்ச்சித் திட்டங்களும் மனுவில் இடம்பெற்றன.


இந்த அனைத்து கோரிக்கைகளும் 2026 தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய தொழிற்சங்கம் சார்பில் மனு சமர்ப்பிக்கப்பட்டது.