தூத்துக்குடி அண்ணா நகர் பகுதி 32வது வார்டு, அண்ணா நகர் 3வது தெரு சந்திப்பில் இன்று மாலை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் தலைமையேற்று, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் முன்னிலை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மதிமுக மாநில வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரன் உரையாற்றிய போது, தனது பேச்சை உற்சாகமாக தொடங்கி அரசியல் நிலைமை குறித்து கடுமையாக விமர்சித்தார். “புனித காந்தி மண்ணிலே, சத்தியத்தின் நிழலிலே நடக்கும் இந்த அரசியல் போரில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டியது அவசியம்” என்று கூறினார். மேலும் அவர் பேசுகையில், “இன்றைய அரசியல் சூழலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து நம்மீது தாக்குதல் நடத்துகின்றன.
அதனால் தான் நான் இதை ‘போர்’ என்று சொல்கிறேன். தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆட்சி மக்களுக்காக செயல்படும் ஆட்சி. பல நலத்திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடைந்துள்ளது,” எனக் குறிப்பிட்டார். தூத்துக்குடி தொகுதிக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களை எடுத்துக்காட்டிய அவர், “116 கோடி ரூபாய் மதிப்பில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை போன்ற பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இது மக்களுக்கு நேரடி பயன் அளிக்கும் ஆட்சி என்பதற்கு சான்று,” என்றார். எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்த நக்கீரன், “தமிழ்நாட்டை கட்டுப்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் மதச்சார்பற்ற ஆட்சியை மக்கள் காக்க வேண்டும். இந்த மண்ணின் தனித்துவத்தையும், சமூக ஒற்றுமையையும் பாதுகாக்க வேண்டியது மக்களின் பொறுப்பு,” என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து அவர், அமைச்சர் கீதா ஜீவனை ஆதரித்து பேசுகையில், “இந்த முறை நம் ஒப்பற்ற வேட்பாளர் கீதா ஜீவன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்,” என்று வாக்கு சேகரித்தார். இக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் நற்றமிழ் நாவுக்கரசர், ஏபிசிவி சண்முகம், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் மகாராஜன், மாநகர துணை செயலாளர் முருகேசன், பகுதி செயலாளர் பொன்ராஜ், மாவட்ட நிர்வாகிகள் மனோகர், பொய்யாமொழி, தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணப்பெருமாள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் பலரும் திரளாக பங்கேற்றனர்.