சென்னையில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றம் வளாகத்தில் நடைபெற்ற முக்கிய சந்திப்பில், பரதவர் (மீனவர்) சமூக உயர்மட்ட குழுத் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து வலியுறுத்திய கோரிக்கையை வெளியிட்டனர்.
அவர்கள் தெரிவித்ததாவது அதிகப்படியான பரதவர் சமூக வாக்காளர்கள் உள்ள தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட தகுதியும், மக்கள் ஆதரவும், களப்பணியாற்றும் அனுபவமும் கொண்ட அஜிதா ஆக்னல் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
“அஜிதா ஆக்னல் அனைத்து சமூக மக்களிடமும் நல்ல தொடர்பும், ஏற்றுக்கொள்ளுதலும் பெற்றவர். பரதவர் சமூகத்தின் உணர்வுகளையும் தேவைகளையும் நன்கு அறிந்தவர். நீண்ட காலமாக களத்தில் இருந்து மக்கள் பிரச்சினைகளுக்காக பாடுபட்டு வருகிறார். எனவே அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில், பரதவர் சமூக மக்களின் பெருவாரியான வாக்குகளுடன் அனைத்து சமூக மக்களின் ஆதரவும் கிடைத்து வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது,” என்று குழுவினர் ஒருமித்த கருத்தை தெரிவித்தனர்.
மேலும், பரதவர் சமூகத்திற்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்குவது சமூக நீதிக்கும், சமநிலையான வளர்ச்சிக்கும் அவசியமானது என்றும், அந்த வாய்ப்பை வழங்குவதன் மூலம் தூத்துக்குடி தொகுதியில் புதிய அரசியல் மாற்றம் உருவாகும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இச்செய்தி, தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜிதா ஆக்னல் அவர்களுக்கு கட்சி தலைமை வாய்ப்பு அளிப்பதா என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.