St. Mary's College (Autonomous), Thoothukudi ரெட் ரிப்பன் கிளப் மற்றும் District AIDS Prevention and Control Unit, Thoothukudi இணைந்து 17.02.2026 அன்று பிற்பகல் 2.15 மணிக்கு கல்லூரி நட்சத்திர அரங்கத்தில் எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடத்தினர்.
மாணவர்களிடையே எச்.ஐ.வி./எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தவறான நம்பிக்கைகளை நீக்குதல் மற்றும் சமூக அவமதிப்பை ஒழித்தல் ஆகியவை இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்களாக அமைந்தன. மாணவிகளின் உற்சாகமான விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி மூலம் எச்.ஐ.வி. குறித்த தகவல்கள் எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கப்பட்டன.
மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் திரு. வி. வேலையா மற்றும் மாவட்ட மேற்பார்வையாளர் திரு. அ. மகாராஜா மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு எச்.ஐ.வி. பரவும் வழிகள், தடுப்பு முறைகள், உண்மை மற்றும் தவறான நம்பிக்கைகள், ஆரம்ப கட்டத்தில் பரிசோதனை மேற்கொள்ளும் முக்கியத்துவம் ஆகியவற்றை விளக்கமாக எடுத்துரைத்தனர். எச்.ஐ.வி. குறித்த சரியான அறிவு இருந்தால் பயப்பட தேவையில்லை என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சி செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரேஸ், முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜெஸி பெர்னாண்டோ, துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர் எழிலரசி மற்றும் சுயநிதி பிரிவு இயக்குநர் அருட்சகோதரி முனைவர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோரின் வாழ்த்துகளுடன் நடைபெற்றது.
கணினி அறிவியல் துறைத் தலைவர் மற்றும் இணை பேராசிரியர் முனைவர் அனிலா மெய்லி நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். உயிரியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் ஷெர்லி கிராஸ், வணிகத் துறை உதவி பேராசிரியர் முனைவர் மரிய டெலிசியா ஹெலினா மற்றும் இயற்பியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் ஜோஸ்பின் கிளாடியா ஆகியோர் இணைந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
300-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் வகையில் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.