தூத்துக்குடி அய்யனடைப்பு கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கால பைரவர் சித்தர் பீடம் வளாகத்தில் மாசி 5 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை அமாவாசை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
17.02.2026 அன்று மதியம் 12.30 மணிக்கு ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், குங்குமம், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது.
இந்த அமாவாசை வழிபாட்டில் கலந்து கொண்டு அம்மனை வணங்கினால் திருமணத் தடை நீங்கி, புத்ரபாக்கியம் கிட்டும், மன அமைதி பெருகும், செல்வ வளம் அதிகரிக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் தீராத நோய்கள் தீர்ந்து, கடன் தொல்லைகள் நீங்கி, அரசியலில் மேன்மை கிடைக்கும் என்றும், முன்னோர்களின் சாபம் நீங்கி தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், முன் ஜென்ம பாவங்கள் தீர்ந்து குடும்பத்தில் ஆனந்தம் பொங்கிடும் என்றும் கூறப்படுகிறது.
வழிபாட்டை தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர். ஏற்பாடுகளை சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில், ஸ்ரீ கால பைரவர் சித்தர் பீட அறக்கட்டளை சார்பில் செய்திருந்தனர்.