தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற உள்ள தெருமுனைப் பிரச்சாரத்துக்கு இன்று மாலை சிதம்பரநகர் நான்காம் தெருவில் உற்சாகமான தொடக்கவிழா நடைபெற்றது. 17.02.2026 முதல் 28.02.2026 வரை நடைபெறவுள்ள இந்த பிரச்சாரத்தை மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா துவக்கி வைத்து தீவிரமான அரசியல் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், மாவட்ட துணைத் தலைவர் சண்முகசுந்தரம், மசானம், மேற்கு மண்டல தலைவர் லிங்கசெல்வம், மண்டல் பொதுச் செயலாளர் லட்சுமணன், மகளிர் அணி மாவட்ட தலைவர் வெள்ளத்தாய், ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், இளைஞரணி மாவட்ட தலைவர் சக்திவேல், மருத்துவர் அணி மாவட்ட தலைவர் பாலாஜி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
உரையாற்றிய சசிகலா புஷ்பா, “தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து மக்களின் மனதை மாற்றலாம் என நினைப்பது தவறு. தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தோம் என்பதையே மக்கள் கணக்கிட்டு பார்க்கப் போகிறார்கள்,” என்று தெரிவித்தார்.
கல்விக்கடன் ரத்து செய்வோம் என்ற வாக்குறுதி இன்னும் நிறைவேறவில்லை என்றும், மாணவர்கள் கடன் சுமையுடன் அவதிப்படுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். பெண்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
“பாரதிய ஜனதா கட்சி பேசுவது மட்டுமல்ல, செய்து காட்டும் கட்சி. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு போன்ற முக்கிய தீர்மானங்களில் நாங்கள் முன்மாதிரி. நல்லாட்சி மற்றும் வளர்ச்சிக்காக தெருமுனை பிரச்சாரம் மூலம் மக்களை நேரில் சந்தித்து வருகிறோம்,” என்றார். தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் 28ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெறவுள்ளது.