பாரதிய ஜனதா கட்சி சார்பில் “நாளை நமதே – தமிழ்நாடு நமதே” என்ற முழக்கத்துடன் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் இன்று மாலை 6.30 மணிக்கு சிதம்பர நகர் 4ஆம் தெருவில் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் உரையாற்றி, 2021ஆம் ஆண்டு தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். “தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளில் மிகக் குறைவானவை மட்டுமே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மதுபானக் கடைகள் மூடப்படும் என்று கூறிய வாக்குறுதி செயல்படுத்தப்படவில்லை,” என்றார்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து அவர் கவலை வெளியிட்டு, “பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. பெண்கள் மீதான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன,” என தெரிவித்தார்.
மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ்நாட்டை புறக்கணிக்கவில்லை என்றும், தூத்துக்குடி புதிய துறைமுக அவுட்டர் ஹார்பர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். தேசிய நெடுஞ்சாலை மேம்பாலங்கள், சாலை வசதிகள் மற்றும் மருத்துவ அமைப்புகள் உள்ளிட்ட பல திட்டங்கள் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
“மக்கள் உண்மையை அறிந்து செயல்பட வேண்டும். மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக நிதி வழங்குகிறது. தமிழ்நாட்டிற்கும் தேவையான ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது,” என ரமேஷ் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், மாவட்டத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம், மேற்கு மண்டல் தலைவர் லிங்க செல்வம், மண்டல் பொதுச் செயலாளர் லட்சுமணன், மகளிர் அணி மாவட்ட தலைவர் வெள்ளத்தாய், ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், இளைஞரணி மாவட்ட தலைவர் சக்திவேல், மருத்துவர் அணி மாவட்ட தலைவர் பாலாஜி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தின் சார்பில் 28ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.