தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெற்றன.

அதில், 3வது வார்டுக்குட்பட்ட ஹவுசிங் போர்டு காலனி மாநகராட்சி கலியா லாவோ பூங்காவில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா முன்னிலை வகித்தார். மாநகராட்சி கணக்கு குழுத் தலைவர் ரெங்கசாமி வரவேற்புரையாற்றினார்.

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் நிறைவேற்றப்பட்ட பணிகளுக்காக நன்றி தெரிவித்ததுடன், புதிய திட்டங்கள் குறித்தும் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

பின்னர் பேசுகையில் மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:

“கடந்த பத்து ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் மக்கள் அலைந்தும் கோரிக்கைகள் நிறைவேறவில்லை. ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் உங்கள் வீடு தேடி மாநகராட்சி வந்து செயல் படுகிறது. முன்பு இந்த பகுதி பஞ்சாயத்தாக இருந்தது. 2008ஆம் ஆண்டு மாநகராட்சியில் இணைக்கப்பட்டபோது சாலைகள் மோசமாக இருந்தன. இப்போது அனைத்து சாலைகளும் 4 அடி உயர்த்தப்பட்டு தரமான ரோடுகளாக அமைக்கப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைநீர் தேக்கம் இருந்த பகுதிகளில் தற்போது கால்வாய் அமைப்புகள் மூலம் நீர் விரைவாக அப்புறப்படுத்தப்படுகிறது.” “மழை வந்தாலும் ஒரு மணி நேரத்தில் தண்ணீர் அகற்றும் திறனை மாநகராட்சி பெற்றுள்ளது. மகளிர் நலனுக்காக ஹவுசிங் போர்டு பகுதியில் தனிப்பட்ட பூங்கா உருவாக்கப்படுகிறது. மாநகராட்சி 360 கிலோமீட்டர் கழிவுநீர் கால்வாய் பராமரிக்கிறது. தினசரி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் மக்கள் பிளாஸ்டிக் பைகளைக் கடுமையாகத் தவிர்க்க வேண்டும். குப்பை இல்லாத தூத்துக்குடி மாநகரத்தை உருவாக்குவது அனைவரின் கடமை.” “தூத்துக்குடி மாநகராட்சியில் தினசரி 180 டன் குப்பைகள் அகற்றப்படுகின்றன. மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து கொடுப்பது மக்கள் கடமை. நானும் முன்பு பிளாஸ்டிக் கவர்களை சாலையில் வீசினேன். ஆனால் இன்று குப்பைத்தொட்டியைத் தேடி அங்கே போடுகிறேன். அதுபோல ஒவ்வொருவரும் மாற்றம் பெற வேண்டும். மாநகராட்சி சாலைகள் 4000க்கும் மேல் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. பண்டாரம்பட்டிக்கு புதிய சாலைகள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன. 1887 தெருவிளக்குகள் புதியதாக பொருத்தப்படும். மாநகராட்சி எப்போதும் உங்கள் வீடு தேடி வருகிறது.”

பின்னர் 2வது வார்டுக்குட்பட்ட முத்தம்மாள் காலனி சமுதாய நலக்கூடத்திலும், 20வது வார்டுக்குட்பட்ட கீதா ஹோட்டல் வளாகத்திலும் இதேபோல் சிறப்பு கூட்டங்கள் நடைபெற்றன.

இக்கூட்டங்களில் கவுன்சிலர் சுப்புலெட்சுமி, முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதி நாராயணன், முத்தம்மாள் காலனி நலச்சங்க தலைவர் தங்கராஜா, வட்ட அவைத்தலைவர் அற்புதராஜ், பிரதிநிதி அருணகிரி, பகுதி சபா உறுப்பினர் ஐசக், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், திமுக பிரமுகர்கள் ஜெயபாண்டி, ராஜா, பொன்ராஜ், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்பட பல அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி சார்பில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாம்கள், தூத்துக்குடி மாநகரத்தின் அனைத்து 60 வார்டுகளிலும் வெற்றிகரமாக நடைபெற்றன.