மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி மாநகரம் 1ஆம் இரயில்வே கேட், காந்தி சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாண்புமிகு அமைச்சருமான திருமதி கீதா ஜீவன் அவர்கள் கலந்து கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் கடந்த ஐந்து ஆண்டுச் சாதனைகளை விரிவாக விளக்கி உரையாற்றினார்.
அமைச்சர் பேசுகையில், கொரோனா காலத்தில் மக்கள் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முதல்வர் எடுத்த தைரியமான முடிவுகள் முக்கியமானவை என்று குறிப்பிட்டார். கடைகள் திறக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை மீண்டும் தொடங்கியதன் மூலம் மக்கள் சிரமத்திலிருந்து மீண்டனர் என்றார்.
அதனைத் தொடர்ந்து, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் போன்ற திட்டங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக செயல்படுத்தப்பட்டதையும், பின்னர் காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். “சொன்ன வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார்; சொல்லாத திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார்” என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டை இந்தியாவில் முன்னணி மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே முதலமைச்சரின் நோக்கம் என்றும், அதற்காக தொழில் வளர்ச்சி, அடிப்படை வசதிகள், வெளிநாட்டு முதலீடுகள் ஆகியவற்றில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
திருவண்ணாமலை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன என்றும், தூத்துக்குடி மாவட்டத்திலும் பல தொழில் திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன என்றும் கூறினார்.
மேலும், சூரிய மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். மகளிர் உரிமைத்தொகை, கலைஞர் கனவு இல்லம் திட்டம் போன்ற மக்கள் நலத்திட்டங்கள் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருவதாகவும், குறிப்பாக 2 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒட்டப்பிடாரம் மற்றும் விளாத்திகுளம் பகுதிகளுக்கான குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் திரு ஏ.பி.சி. சண்முகம் அவர்கள் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி தொடர வேண்டும் என வலியுறுத்தி பேசினார். இக்கூட்டத்தில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட பொருளாளர் சுசி ரவீந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜமோகன் செல்வின், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், வட்டச் செயலாளர் சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநகர மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மாடசாமி, தனலட்சுமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி முத்து, மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி விமல் வங்காளியார், தேமுதிக நிர்வாகிகள் தயாள லிங்கம், வல்லரசு துரை, சமத்துவ மக்கள் கழக நிர்வாகி அற்புதராஜ், மக்கள் நீதி மய்ய நிர்வாகி ஜவகர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீராசா, மனிதநேய மக்கள் கட்சி யூசுப், மனிதநேய ஜனநாயக கட்சி முகமது ஹசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.