தூத்துக்குடி பாத்திமா நகர் பரிசுத்த பாத்திமா அன்னை ஆலயத்தில் நடைபெற்ற பங்கு மேய்ப்புப் பணிக்குழு தேர்தலை தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக புல்டன் ஜெசின் மற்றும் அவரது மனைவி பிரெனிலா மீது நடவடிக்கை எடுக்க கோரி பங்கு இறைமக்கள் சார்பில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை கத்தோலிக்க திருச்சபையின் விதிமுறைகள் மற்றும் பங்கு மேய்ப்புப் பணிக்குழு தேர்தல் நடைமுறைகளின் அடிப்படையில், தூத்துக்குடி மறைமாவட்ட பொதுநிலையினர் பணியகத்திலிருந்து 17 தேர்தல் பணியாளர்கள் வருகை தந்து பாத்திமா நகர் பங்கில் மண்டலம் வாரியாக தேர்தலை நடத்தினர்.
தேர்தலுக்கு முன்பாக ஆலயத்திலும், தெருவாரியாகவும், பொதுக்கூடத்திலும் மூன்று முறை அறிவிப்பு வழங்கப்பட்டு, முறையற்ற திருமண வாழ்வில் இருப்பவர்கள் திருச்சபைச் சட்டம் மற்றும் பொதுநிலையினர் பணியக தேர்தல் விதிமுறைகளின்படி பங்கு மேய்ப்புப் பணிக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட முடியாது என தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில், பாத்திமா நகர் பங்கின் 3ஆம் தெரு கிழக்கு பகுதியில் நடைபெற்ற தேர்தலில் முறையற்ற திருமண வாழ்வில் இருந்ததாக கூறப்படும் புல்டன் ஜெசின் ஒரு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் திருச்சபைச் சட்டம் மற்றும் தேர்தல் விதிமுறைகளின் அடிப்படையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு அடுத்ததாக அதிக வாக்குகள் பெற்ற மைக்கேல் மார்ட்டின் அந்தப் பகுதியில் பங்கு மேய்ப்புப் பணிக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை தேர்தலை நடத்திய பொதுநிலையினர் பணியக இயக்குநர் அருட்பணி சகாயராஜ் வல்தாரிஸ் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து புல்டன் ஜெசின் மற்றும் அவரது மனைவி பிரெனிலா ஆகியோர், பொதுநிலையினர் பணியக இயக்குநர் அருட்பணி சகாயராஜ் வல்தாரிஸ் மற்றும் அவரது குழுவினரையும், தேர்தல் கண்காணிப்பு குழு தன்னார்வ பணியாளர்களையும் பொதுவெளியில் தகாத வார்த்தைகளால் விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், தேர்தலுக்கு தொடர்பில்லாத பாத்திமா நகர் பங்குத்தந்தை அருட்பணி ஜேசுதாஸ் பர்னாந்து, முன்னாள் பங்குப் பேரவை துணைத் தலைவர் J.M.J. அந்தோணிசாமி மற்றும் அவர் சார்ந்த JMJ குழு, ஜவஹர், ஆரோக்கியசாமி, விஜோனிஸ், சகாயம் ஆகியோர்மீதும், மேலும் பாத்திமா நகர் ஊர் நலக்குழு தலைவர் செல்வராஜ் மற்றும் அவருடன் பணியாற்றும் பாஸ்கர் ஆகியோர்மீதும் பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் சமூக ஊடகங்களிலும் பொய்யான தகவல்கள் மற்றும் அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்பி, ஊரின் ஒற்றுமை, அமைதி மற்றும் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாக பங்கு இறைமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையடுத்து, பங்கு இறைமக்கள் சார்பில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஊரின் அமைதி மற்றும் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள புல்டன் ஜெசின் மற்றும் அவரது மனைவி பிரெனிலா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பங்கு இறைமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.