முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயரை நேரடியாக குறிப்பிட்டு உருவாக்கப்பட்ட அரசியல் விமர்சன பாடல் ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பகிரப்பட்டு வருகிறது. “ஸ்டாலின் வந்தாரும்மா… தலையில துண்ட போட்டாரும்மா…”, “நடுத்தெருவில விட்டாரும்மா…” போன்ற வரிகள் பொதுமக்களின் தினசரி வாழ்வாதார சிக்கல்களை சாடும் வகையில் அமைந்துள்ளன.
பாடலில், “இருட்டா கிடக்கும் வீட்டுக்குள்ள இப்போம் கரண்ட் பில் ஏகிறுதம்மா…”, “வரிகங்க எகிறி அடிக்குதம்மா…”, “ஊழல் எங்கும் நிரம்பி வழியுதம்மா…” என்ற வரிகள் மூலம் மின்சார கட்டண உயர்வு, வரி சுமை, ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவை குறித்த அதிருப்தி வெளிப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, “குடும்ப சொத்த வளர்க்க ஆட்சிக்கு வந்தாரும்மா…” என்ற வரி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பாடல் எளிய சொற்கள், கிராமிய நடையுடன் அமைந்திருப்பதால் பொதுமக்கள் மத்தியில் விரைவாக பரவி வருகிறது. இளைஞர்கள் பலர் குறும்பட வடிவில் இந்த பாடலை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருவதால், ஆயிரக்கணக்கான பார்வைகள் கிடைத்து வருகிறது.
அரசியல் தரப்புகளில் இந்த பாடல் குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஆதரவாளர்கள் இதை திட்டமிட்ட விமர்சன முயற்சி எனக் கூற, எதிர்க்கட்சியினர் “மக்களின் மனநிலை பிரதிபலிப்பு” என வாதிடுகின்றனர்.
சமூக வலைதளங்கள் அரசியல் கருத்துக்களை பரப்பும் முக்கிய மேடையாக மாறியுள்ள நிலையில், இந்த வைரல் பாடல் அரசியல் சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்துமா என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.