தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி போலியான வாட்ஸ்அப் கணக்குகள் உருவாக்கி பொதுமக்களிடம் பண மோசடி செய்ய முயன்ற நபரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.


மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை Display Picture ஆக வைத்து பல போலியான வாட்ஸ்அப் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மூலம் பொதுமக்களிடம் பணம் கேட்டு மோசடியில் ஈடுபடும் திட்டம் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் தனிப்பட்ட உதவியாளர் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) தீபு மேற்பார்வையில், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி மற்றும் போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.


விசாரணையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அனுஜ் குமார் (21) என்பவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி பல போலியான வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கி, பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, சைபர் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 09.02.2026 அன்று உத்தரப்பிரதேசம் சென்று அனுஜ் குமாரை கைது செய்து, 12.02.2026 அன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியரின் பெயர் மற்றும் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்ற முயன்ற குற்றவாளியை விரைவாக கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.